நல்ல பழக்கங்களை நாம் பின்பற்றினால் தான் நம்மை பார்த்து குழந்தைகள் பின்பற்றும்

குடும்பத்தில் பெரியவர்கள் நல்ல ஒழுக்கம், நீதி நேர்மையை தங்களது நடத்தையில் பின்பற்ற வேண்டும். இதை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு இதுவே கவசம் போல தீய எண்ணங்களிலிருந்து பாதுகாக்கிறது.

கீழ்ப்படிதல் என்பது மிகவும் முக்கியமான குணம். தினசரி வாழ்க்கையில் உடல், மனம், புத்திக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர்கள் சிறிது நேரம் ஒதுக்கி பழக பேச வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூற வேண்டும்.

இன்று அனேகமாக கூட்டுக் குடும்பங்கள் இல்லை என்றே சொல்லலாம். தனித்துவம், தனிக்குடும்பம் என்று ஆகிவிட்டது. அதிலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டதால் குழந்தைகளை மற்றவர்கள் பராமரிப்பில் தான் வளர்க்கிறார்கள். இதனால் பல வேண்டாத பழக்கங்கள் குழந்தைகளை அண்டுகின்றன.

தனி குடும்பம் போல ஒரே குழந்தை என்று அநேக குடும்பங்களில் இருப்பதால் பகிர்ந்தளிக்கும் சுபாவமும் கற்க வாய்ப்பில்லை. ஒரு குழந்தையாக பிறந்தவன், பிறந்தவள் சுபாவமே சுயநலமாகத்தான் உள்ளது. இனியாவது பெற்றோர்கள் அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

பள்ளியில் படிப்பு மட்டுமே படிப்பு ஆகாது. எழுத்தறிவில்லாதவன் பண்பாளராக திகழ்வான். படித்தவன் பண்பற்றனாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல பண்பு கல்வி இன்றைய கல்விச்சாலையில் கிடையாது. அதை குடும்பத்தினர் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒரு மாணவன் எல்.கே.ஜியில் சேர்ந்தான்.  வகுப்பில் முதலிடம். இப்படி பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது. காலையில் எழுந்தவுடன் சில அவசியமான வேலைகளை துரிதமாக செய்துவிட்டு பள்ளி செல்வான். திரும்பியவுடன் வீட்டில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் பள்ளி பாடங்களை மட்டும் படிப்பான். இப்படி அவனது மாணவப் பருவம் பிளஸ் டூ கல்லூரி வரை தொடர்ந்தது. பெற்றோர்களிடம் கூட பேசுவது அரிது.

வீட்டிற்கு வந்த விருந்தினரைக் கூட பார்க்க மாட்டான். அப்படி வந்த விருந்தாளிகள் விருப்பப்பட்டால் பெற்றோர்களே குழந்தையை பார்க்க விடாமல் தடுத்து விடுவார்கள். அவன் படிக்கிறான். நாளைய தினம் பரீட்சை என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். யாரிடமும் பேச மாட்டான். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியதால், அவனுக்கு வெளியுலகமே தெரியாமல் போய் விட்டது.

வேலையும் நல்ல கம்பெனியில் வெளிநாட்டில் கிடைத்தது. அவனது மார்க் தகுதி அடிப்படையில் பெரிய பதவி கொடுக்கப்பட்டது. அவனுக்குக் கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். முதல் நாளே அவனால் தனது வேலையை சரியாக தொடர முடியவில்லை. ஒரு மாதமே கடந்தது. திடீரென்று ஒருநாள் வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கே திரும்பினான்.

நல்ல படிப்பு, மதிப்பெண்கள் இருந்தும் அவன் வேலைக்குத் தகுதியற்றவனாக ஆகிவிட்டான். கிட்டத்தட்ட மனநோயாளியாகவே மாறிவிட்டான். முன்பு போல் எப்போதும் அறையிலேயே முடங்கிக் கிடந்தான்.

முன்பு வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் இப்போதும் வர ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் படிப்பு, மார்க் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு, வாழ்க்கைப் பாடத்தை கற்க விடாமல் துரோகம் இழைத்து விட்டீர்கள். அதன் விளைவுதான் இது. இனி அவன் வாழ்க்கையை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.

சிறுவயதிலேயே குழந்தைகளை நல்லவர்களுடன் பழக விடுங்கள். அதுதான் சிறந்த பயிற்சி. அதன்மூலம்தான் வாழ்க்கைப் பாடம், நெளிவு சுளிவுகள் கற்க முடியும்.