கடந்த சில தினங்களாக பங்களாதேஷில் நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பாரதத்தில் ஹிந்துக்கள் நாதியற்றவர்களாவே கருதப்படுபவர்கள் மத்தியில் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதசார்பற்றவர்களாக கூறிக்கொள்ளும் ஒரு சிலர் கூட குரல் கொடுக்க முன்வந்திருப்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளிலும் பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு ஆரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு மிச்சிகன் எம்.பி. ஸ்ரீதானேதர் எழுதியுள்ள கடிதத்தில், பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக நான் மட்டுமல்ல சர்வதேச சமூகத்தினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷில் துன்புறுத்தப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு அகதிகள் என்ற தற்காலிக பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை பைடன் நிர்வாகம் வழங்க வேண்டும். பங்களாதேஷிற்கு இது ஒரு சிக்கலான தருணம். வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசுக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் நாம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் ஹிந்துக்களும் தங்களது எதிர்ப்பை வலிமையாக காட்ட ஆகஸ்ட் 10 அன்று டாக்கா மற்றும் சிட்டகாங்கில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வீதிகளில் இறங்கி போராடினார். ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரைத் தாக்குபவர்களுக்கான விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு நீதிமன்றங்கள் உடனடியாக அமைக்கவும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, பாரதத்திலும் பங்களாதேஷ் ஹிந்துக்களுக்காக ஆதரவு குரல் எழுப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பங்களாதேஷில் நிலவும் சூழ்நிலையை அடுத்து பாரத் -பங்களாதேஷ் எல்லையில் தற்போதைய நிலைமையை கண்காணிக்க மத்திய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு உதவ உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.பங்களாதேஷில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை அடுத்து, பிரபல பாரதிய எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அட்டூழியங்களைக் கண்டித்து பாரதிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.
பங்களாதேஷில் 2013ல் இருந்து 3,600க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதை அந்தக் கடிதம் வெளிப்
படுத்துகிறது. காங்கிரஸ் ஆளும் ஜார்கண்ட்டில் கூட ஆர்பாட்டம் மற்றும் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திராவிட மாடல் அரசு, பங்களாதேஷ் வன்முறையில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்த கூட அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.