ஆர்.எஸ்.எஸ் 1925ம் ஆண்டு விஜயதசமியன்று டாக்டர் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தேசத்தின் எழுச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தொண்டர்களைக் கொண்டது. இதற்கு இணையான இயக்கம் பாரதத்தில் மட்டுமல்லாமல் அகிலத்திலேயே இல்லை.
1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி மகாத்மா காந்தியை நாதூராம் கோட்சே சுட்டுக் கொன்றார். கோட்சே, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் நேரு அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதித்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே நேரு அரசு இந்தத் தவறை உணர்ந்து கொண்டது. 1949ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.
1962ல் பாரதம் மீது சீனா போர் தொடுத்தது. நமது ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் செயல்பட்டார்கள். எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு தடை விதித்தாரோ, அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்பர்கள் சீருடையில் 1963ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி அளித்தார். அந்த கம்பீரக் காட்சி இப்போதும் நம் நெஞ்சில் பசுமையாக உள்ளது.
1975ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி பாரதத்தில் உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பிரதமராக இருந்த இந்திரா என்ற தனி நபருக்கு ஏற்பட்ட நெருக்கடியை அவர் நாட்டுக்கே ஏற்பட்ட நெருக்கடியாக உருமாற்றிக் கொண்டார். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் நெருக்கடி நிலைக்கு எதிராக பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து தொய்வின்றி போராடினார்கள். 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் காலாவதியாகி விட்டது.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அயோத்தியில் இருந்த சர்ச்சைக்கிடமான கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அப்போதைய நரசிம்மராவ் அரசு தடை விதித்தது. ஆனால், மத்திய தீர்ப்பாயத்தில் இதை அரசால் நியாயப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை தவிடு பொடியாகி விட்டது.
அரசு அலுவலகர்கள், ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கக் கூடாது என்ற கெடுபிடி ஏற்கெனவே அமலில் இருந்தது. இது நியாயத்துக்குப் புறம்பானது. 2023ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் உயர்நீதிமன்றம் இந்த தடை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுஸ்ருத் அரவிந்த், தர்மாதிகாரி, கஜேந்திர சிங் ஆகியோர் அளித்த தீர்ப்பு முன்னுதாரணமாக உள்ளது. இப்போது ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் பாரதம் முழுவதும் அரசு அலுவலர்கள் பங்கேற்க தடை எதுவும் கிடையாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்பே வந்திருக்க வேண்டும். சற்று காலதாமதமாக வந்துள்ள போதிலும் இதற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி