கொள்ளை அழகு

‘‘தமிழக கோயில்கள் தொன்மை கலாச்சாரத்தை அடையாளப்படுத்துகின்றன. கலை, அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளின் திறமைகளை, பெருமைகளை, அறிவை எடுத்துகாட்டுகின்றன. ஆன்மிக நடவடிக்கைகளுக்கு வழிகோலுகின்றன’’ என்று நீதியரசர் ஆர். மகாதேவன் 2020ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இருக்க நம் கோயில்கள், மடாலயங்கள், பசுமடங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் கூறுவது என்ன? 1947க்கு முன் தான் அன்னியப் படையெடுப்பென்றால், இன்றோ அரசியல்வாதிகள் – கட்சி பேதமின்றி -கவுன்சிலர் முதல் உயர் பொறுப்பில் உள்ளவர் வரை கோயில் சொத்தை கையாடல் செய்யாதவர்கள் கிடையாது. அவர்கள் பார்வையில் கோயில் என்பது ஏ.டி.எம்.
நீதி மன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் ‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு ” என்று ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆலய பாதுகாப்புக் கமிட்டி போன்ற ஹிந்து அமைப்புகள் முழங்கி வருகின்றன. இதன் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் கிடைத்த சில தீர்ப்புகளை மட்டும் காண்போமா.
புரி ஜகந்நாதர் கோயிலை நிர்வகிப்பதில் எழுந்த ஒரு பிரச்சினையில் 2015ல் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், கோவில் விவகாரங்களை நிர்வகிப்பதில் பல்வேறு மாநில அரசுகளின் தோல்வி குறித்து கவலை தெரிவித்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியது. கோவில் நிர்வாகத்தை பக்தர்கள் வசம் ஒப்படையுங்கள் என்று ஏப்ரல் 2019ல் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள பழைமையான ஆலயங்களை ஆகமங்களின் விதிகளுக்கு மாறாக, அர்ச்சகர்களாக தமிழக அரசு “நம்பிக்கையில்லா
தவர்களை” நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி தொடரப்பட்ட பல மனுக்களை விசாரிக்க நீதி அரசர் போபண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற அயர்வு செப்டம்பர் 2023ல் ஒப்புக்கொண்டுள்ளது.
‘மடங்களிலும், மடங்களுக்கு சொந்தமான கோவில்களிலும், அரசு நிர்வாகத்தால் குறுக்கிட முடியாது. செயல் அலுவலர்களையும் நியமிக்க முடியாது. அப்படி நியமித்திருந்தால் அது செல்லாது’ என ஆந்திரா, கர்நாடா மாநிலங்களின் வெளியான தீர்ப்புகள் வாயிலாக, அறநிலையத்துறைக்கு அதன் எல்லைகள் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.
பழனி கோயிலில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று எல்லோரையும் அனுமதிக்க வேண்டும் என்று ஹிந்து அறநிலையத்துறை முயன்றது 2023ல், பக்தர்களும் ஹிந்து இயக்கங்களும் அதில் உள்ள ஆபத்தை உணர்ந்து உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள். “அறநிலையத் துறையின் சட்டத்தின் 24வது மற்றும் கோயில் நுழைவு சட்டம் பிரிவின் கீழ் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய- அதாவது கொடிமரத்தைத் தாண்டி அனுமதி இல்லை” என்று 2024 ஜனவரி 30 அன்று தீர்ப்பளித்ததோடு கோயில்கள் ஒன்றும் சுற்றுலா மையம் அல்ல என்று குட்டும் வைத்தது.
அறநிலையத் துறையின் மூலம் பல மாவட்டங்களில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று திமுக அரசு பொறுப்பேற்றதும் தெரிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அதன்காரணமாக ஏற்கெனவே துவங்கப்பட்ட மூன்று கல்லூரிகளை தவிர்த்து இதர கல்லூரிகளை துவங்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஆலய வருமானம் ஆலயத்தின் ஆன்மீக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பணிகளுக்கு அல்ல என்பதை நினைவூட்டவும் தயங்கவில்லை.
முத்தாய்ப்பு:
மேலும், கோயில் சொத்துக்கள் -நிலங்களோ, கட்டிடங்களோ, நகைகளோ, பணமோ (எல்லாமே கோயிலில்) குடிகொண்டுள்ள இறைவனுக்கே சொந்தம். அவையெல்லாம், ஆன்மீகச் செல்வர்களால், அவரவர் வசதிக்கேற்ப இறைவன்மேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக காணிக்கையாகக் கொடுக்கப்பட்டவை. அவற்றை கோயில் சம்பந்தப்பட்ட ஆன்மீகக் காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், பொது நன்மை என்று காரணம் காட்டி மடைமாற்ற இயலாது என பல நீதிமன்றங்கள் அவ்வப்போது தலையிட்டு மாநில அரசுகளின் வாக்கு அரசியல் கனவுகளைத் தகர்த்துவிடுகின்றன. உதாரணம்: கொரோனா காலத்தில் கேரளாவின் கம்யூனிச அரசு குருவாயூரப்பன் தேவஸ்தானத்தின் உண்டியல் பணத்தினை அரசின் அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்ட போது, அது தடுக்கப்பட்டது.
இப்படியாக, பல நல்ல மாற்றங்கள் கண்களில் தெரிகின்றன. மகிழ்ச்சி கொள்ள வேண்டிய அதே தருணத்தில், மீண்டும் மீண்டும் மாநில அரசுகள் புதிது புதிதாக யோசித்து வெவ்வேறு பாணிகளில் ஹிந்து சமுதாயத்துக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. மெட்ரோ பணி, சாலை விரிவாக்கப் பணி, வெள்ள நீர் வடிகால் அமைப்பு என்று ஏதோ ஒரு காரணத்திற்காக உரிய ஆவணங்கள் இருந்தாலும், தனியார் நிலத்தில் இருந்தாலும் கோயில்களை இடித்துத் தள்ளுவது தொடர்கதை தான். ஒவ்வொரு முறையும் ஹிந்துக்கள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நியாயம் பெற வேண்டும். அப்படியே பெற்றாலும் அரசின் நிவாரணத்தை பெறவும் அதன்படி நடவடிக்கை எடுக்கவும் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தமிழகத்தில் ஆலயப் பாதுகாப்பு விவகாரத்தில் கடக்க வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய உள்ளது.
கட்டுரையாளர் : செய்தி விமர்சகர்