மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர், தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுதொண்டு நாயனார் பிறந்த திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் 1908ம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று பிறந்தார். தந்தை முத்தையா தேசிகருக்கு ஆலயங்களில் தேவாரம் பாடும் பணி. தந்தையே முதல் குருவாகக் கொண்டு சிறு வயதிலேயே பக்தி இலக்கிய பாடல்களில் இசைப்பயிற்சி பெற்றார். சடையப்ப நாயனக்காரர், தன்னுடைய சித்தப்பா மாணிக்கதேசிகர், வயலின் வித்வான் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை என பல குருமார்களிடம் தமிழிசை, கர்நாடக இசையினை திறம்பட கற்றார். 14 வயதில் திருமருகல் கோயிலில் நடந்த அரங்கேற்றத்தின்போது இசைப் பெரியோர்களிடம் பாராட்டுகளையும், பரிசினையும் பெற்றார். மதுரை ஓக்கூர் லட்சுமண செட்டியார் தேவாரப் பாடசாலைக்கு 18 வயதில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தமிழிசைக்கும், கர்நாடக இசைக்குமான வேர்கள் வெவ்வேறு அல்ல என்பதை தமிழ் பண்களையும், பாடல்களையும் தேடித்தேடி உணர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.
மதுரை மீனாட்சியம்மனின் உற்சவத்தில் அம்பாள் குறித்து இவர் இயற்றி, இசையத்து பாடிய 9 பாடல்கள் அப்பொழுதே புகழ் பெற்றவை. தேசிகரின் கச்சேரிகளையும், இசைத்தட்டுகளையும் பாமரர்களும் ரசிப்பதை கண்ட வேல் பிக்சர்ஸ் நிறுவனம் அவரை பட்டினத்தார் படத்தில் பாடி நடிக்க அழைத்தது. எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த பட்டினத்தார் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக 25 வாரங்கள் தொடர்ந்து ஓடி சரித்திர சாதனை படைத்தது. அறிமுகப்படமே நல்ல திருப்பம் தந்ததால் அவரை வைத்து மீண்டும் வல்லாள மகராஜா என்ற படத்தை எடுத்தது வேல் பிக்சர்ஸ் நிறுவனம். அந்தப் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த எம்.எஸ்.தேவசேனாவை மணந்து கொண்டார் தேசிகர்.
தண்டபாணி தேசிகரின் குரலும், தோற்றமும் தெய்வீக அருளாளர் வேடங்களுக்கே பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்த பட முதலாளிகள் தொடர்ந்து தாயுமானவர் (1938), மாணிக்கவாசகர் (1939), நந்தனார் (1942), திருமழிசை ஆழ்வார் (1948) ஆகிய படங்களில் கதாநாயகனாக பாடி நடிக்க வைத்தனர். இவற்றில் ஜெமினி பிச்சர்ஸ் தயாரித்த நந்தனார் தமிழ் சினிமா சரித்திர சாதனை படைத்தது. படத்தில் தேசிகரின் கணீர் குரலில் ஜக ஜனனி, என்னப்பனல்லவா, தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம், வழிமறித்து நிற்குதே, காண வேண்டாமா ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. படத்தில் நந்தனாராகவே வாழ்ந்து காட்டினார் தேசிகர்.
பின்னாளில் பட வாய்ப்புகள் குறைந்தபோதும் பல்வேறு தமிழிசை கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வந்தார். தர்மபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான இசைப் புலவராகவும், திருவாடுதுறை ஆதீனத்தின் முதன்மை இசை வித்வானாகவும் பணியாற்றினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழிசை கல்லூரியின் முதல்வராக
15 ஆண்டுகள் பணியாற்றி பல சிறந்த இசை மாணவர்களை உருவாக்கினார். சென்னை இசைக்கல்லூரி உடனும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினருடனும் தொடர்பில் இருந்தார். 1972ம் ஆண்டு ஜூன் 28ம் நாள் எம்.எம்.தண்டபாணி தேசிகர் காலமானார்.