யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு 7 லட்சம் பேர் பங்கேற்பு

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., — ஐ.ஆர்.எஸ்., – ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 24 வகை பதவிகளுக்கான தேர்வானது, முதல் நிலை, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என, மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு நாடு முழுதும், 79 நகரங்களில் நேற்று நடந்தது. அதில், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி, வேலுார், கோவை என, ஐந்து நகரங்களில் நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வில், 25,000 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, காலை, 9:30 – 11:30 மணி வரை பொது அறிவு தேர்வும்; மதியம், 2:30 – 4:30 மணி வரை திறனறி தேர்வும் நடத்தப்பட்டது.

இத்தேர்வில் பங்கேற்க, மாணவ – மாணவியர், காலை, 7:00 மணி முதல் ஆர்வத்துடன் மையங்களை நோக்கி வந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின், தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மொபைல் போன், ஸ்மார்ட் கடிகாரம் என, மின்னணு பொருட்கள் எதையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, 35 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வின் முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரும். தேர்ச்சி பெறுவோருக்கு, செப்., 20ல் முதன்மை தேர்வு நடக்க உள்ளது. இதில், வெற்றி பெறுவோருக்கு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கோவையில் நேற்று, 17 மையங்களில் நடந்த யு.பி.எஸ்.சி.,தேர்வில், தேர்வு எழுதுவதற்காக, 7,332 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை நேரத்தில் நடந்த முதல் பிரிவு தேர்வில், 4,411 பேர் தேர்வு எழுதினர். 2,921 பேர் தேர்வு எழுத வரவில்லை. மதியம் இரண்டாம் பிரிவு தேர்வில், 4,386 பேர் தேர்வு எழுதினர். 2,946 பேர் தேர்வு எழுத வரவில்லை.