கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்தும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞால மீது இலக்கணம் கண்டதும் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான் புகழ் கொண்டதும்”…. ஆங்கிலேயன் திணித்த கல்வி கற்றவர்களுக்கு தெரியாமல் போகிறதே என்று பாரதி புலம்பினான். பாரத மண்ணின் மைந்தர்களுடைய வீரமும் ஞானமும் தெரியாதபடி சுதந்திர பாரதத்திலும் கடந்த முக்கால் நூற்றாண்டாக அதே புலம்பல் நீடிக்கிறது.
இந்த சோக வரலாற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க யூ.ஜி.சி (பல்கலைக்கழக மானிய கமிஷன்) பிள்ளையார் சுழி போடுகிறது. ஜூலை 13 அன்று யூ.ஜி.சி வெளியிட்ட அறிவிப்பில் “வரும் அக்டோபருக்குள் பாரத நாடு நெடுக 6 மையங்களில் 1,000 பல்கலை / கல்லூரி பேராசிரியர்களுக்கு ஐ.கே.எஸ் (IKS) அதாவது ‘பாரத ஞான பரம்பரை’ பற்றி ஆறு நாள் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
தேசத்தின் மாணவர்கள் பாரத ஞான பரம்பரை பற்றி பாட திட்டத்திலும் வகுப்பறையிலும் தெரிந்து கொள்வது தற்போது பூஜ்யம். யூ.ஜி.சி,- ஐ.கே.எஸ் திட்டமிட்டுள்ள முயற்சி மூலம், பாரத ஞான பரம்பரை குறித்து வகுப்பு நடத்தி 30 சதவீத அளவுக்கு (முதல் கட்டமாக) இந்த ஆண்டு பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது இலக்கு. டெல்லி பல்கலைக்கழகம், நாகபுரி ஆர். டி. எம் பல்கலைக்கழகம், காசி ஹிந்து பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், காஷ்மீர் பல்கலைக்கழகம், குவாஹாட்டி பல்கலைக்கழகம் ஆகியவை அந்த ஆறு மையங்கள் என்று தெரிகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர் சேகரித்து வைத்துள்ள ஞானப் பொக்கிஷத்தை நாளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த இந்த வகுப்பு நிச்சயம் பயன்படும். இந்த முயற்சி முழு வெற்றி பெற வாழ்த்துவோம்.
‘பாரத ஞான பரம்பரை ஓர் அறிமுகம்’ என்ற ஆங்கில நூல் அனைத்து கல்லூரிகளும் பாடத்தில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த நூலை எழுதிய பெங்களூரு இந்திய மேலாண்மை கழக (ஐ. ஐ. எம்) பேராசிரியர் பி. மகாதேவன் அண்மையில் இளைஞர்களிடையே பேசுகையில் “பாரத ஞான பரம்பரை பிரம்மாண்டமானது. ஆனால் அதில் என்ன இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பது மூட்டையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதை சுமந்து கொண்டிருப்பதைப் போன்றது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பின்? “ஆராய்ச்சி மாணவர்கள் அவரவர் துறை சார்ந்த தொன்மை பாரத ஞானப் பரம்பரை நூல்களை ஆழமாக ஆராய வேண்டும். இன்றுள்ள எந்தத் துறை
சார்ந்த அறிவியல் விஷயமானாலும் நமது பரம்பரையில் அதுகுறித்து தகவல் தரும் நூல் நிச்சயம் உண்டு” என்று சொல்லி ஊக்குவிக்கிறார். அவர் தரும் உதாரணம்: ஆண் / பெண் மனித உடலில் உயரம் உள்ளிட்ட அளவு ஐந்து விகிதங்களாக உள்ளன என்று ‘பிருஹத் சம்ஹிதா’ தெரிவிக்கிறது. நாடு நெடுக விக்கிரகங்கள் இந்த விகிதங்களின் படி வடிக்கப்பட்டுள்ளன என்று ‘சமராங்கண சூத்ர தாரா’ கண்டறிந்து சொல்கிறது. ஆடை உற்பத்தியாளர் இந்த நூல்களை ஆராய்ந்து உடலின் ஐந்து விதமான விகிதங்களை கற்றறிந்து கொண்டால் தொழிலில் பெரும் முன்னேற்றம் அடையலாம்.”
அமெரிக்க வர்த்தக நிறுவனம் ஒன்று வேம்பு கிருமி நாசினி என்று கூறி அதற்கு காப்புரிமை பெற்றுவிட்டது. பாரத நாடு வேம்பை கிருமி நாசினியாக எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தாலும் அதற்கான நூல் ஆதாரத்தை முன்வைக்கத் தவறிவிட்டோம். எனவே வேம்பு காப்புரிமை வழக்கில் தோற்றோம். புண் ஆற்றும் மருந்தாக மஞ்சள் பயன்படுத்தி வருகிறோம் இதற்கான காப்புரிமை வழக்கில் நாம் வெற்றி பெற்றோம். காரணம், மஞ்சளின் மருத்துவ குணத்தை நாம் அறிந்திருந்தோம் என்பதற்கு நம்மால் ஆதாரம் காட்ட முடிந்தது; பாரத ஞான பாரம்பரிய களஞ்சியத்தின் கதவை நம்மால் சற்றே திறக்க முடிந்தது. நாளை அறிவுசார் உலகம் உதயம் ஆகும். அதில் பாரதம் சிம்மாசனம் போட்டு அமர வேண்டும் என்றால் ஐ.கே.எஸ் எனப்படும் பாரத ஞான பாரம்பரியம் அபாரம் என்று மட்டும் தம்பட்டமடித்துக் கொண்டிருக்காமல் அதன் உள்ளடக்கத்தை அணு அணுவாக ஆராய்ச்சி செய்து கண்டறிவது இன்றிமையாதது என்று பி. மகாதேவன் போன்ற அறிஞர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், சமஸ்கிருதம், சங்கீதம் தொடங்கி விவசாயம், போர் முனை வியூகம் வரை பாரத ஞான பாரம்பரியத்தில் இல்லாத விஷயம் இல்லை. அமரர் கொத்தமங்கலம் சுப்பு, சென்னை கல்லூரி இலக்கியக் கூட்டத்தில் ஒரு முறை “இஞ்சிக்குப் பாய்ச்சி எலுமிச்சை வேரோடி” என்ற நாடோடிப் பாடலால் நீர் மேலாண்மை மனதில் தெள்ளத் தெளிவாக பதிந்து விடுகிறது என்று சுவைபடச் சொன்னார். ஆம், நூல்களில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு பாரத ஞான பாரம்பரியம், மக்கள் புழங்கும் கிராமிய சொல்லாடலில் பொதிந்து கிடக்கிறது; அது என்றும் யாருக்கும் பயன் தரக் காத்திருக்கிறது; அதை அணுகி ஆராய்ந்து புரிந்துகொள்ள அடுத்த தலை
முறையை ஊக்குவிப்பது நம் கடமை.
அதாவது பாரத ஞான பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளிப்பது பற்றி பேசுவது, முயற்சி செய்வது எல்லாம் பழம் பெருமை பேசுவது ஆகாது; பாரதம் உலகின் குரு ஆவதற்கான ராஜபாட்டை அது.
கட்டுரையாளர் :
மூத்த பத்திரிகையாளர்