தேர்தல் தோல்விக்கு இவிஎம் மீது ராகுல், அகிலேஷ் குற்றம் சாட்டுவர்: அமித் ஷா

 உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் நகரில் பாஜக வேட்பாளர் பங்கஜ் சவுத்ரியை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பிற்பகல் ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் செய்தியாளர்களை சந்திப்பார்கள்.

அப்போது அவர்கள்தங்களின் தேர்தல் தோல்விக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) காரணம் காட்டுவார்கள். இத்தேர்தலில் ராகுல் காந்தி 40 இடங்களை கூட பெறமாட்டார். அகிலேஷ் வெறும் 4 இடங்களை மட்டுமே பெறுவார். எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதமர் வேட்பாளர் எவரும் இல்லை.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பேர் பிரதமராக இருப்பார்கள். இது ஜெனரல் ஸ்டோர் அல்ல. 130 கோடி மக்களை கொண்ட நாடு. அப்படிப்பட்ட பிரதமர் செயல்பட முடியுமா? பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் பாஜகவினர் அணுகுண்டுக்கு பயப்படமாட்டார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும். அதனை நாங்கள் பாகிஸ்தானிடமிருந்து மீட்போம். உ.பி.யில் அகிலேஷ்யாதவ் ஆட்சியில் சகாரா ஊழல் நடை பெற்றது. இதில் முதலீட்டாளர்களின் பணத்தை திரும்பக் கொடுக்கும் நடைமுறையை பிரதமர் மோடி தொடங்கிவிட்டார்.

சவுத்ரி சரண் சிங்கின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு பாரத ரத்னா வழங்கும் பணியை மோடி செய்தார். இதன் மூலம் உத்தரபிரதேச விவசாயிகள் அனைவருக்கும் மோடி மரியாதை செய்துள்ளார். இவ்வாறு அமித் ஷா கூறினார்.