‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது: பிரதமர் மோடி

மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாத்மா காந்தி மிகவும் புகழ் பெற்ற மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் மகாத்மா காந்தியைப் பற்றி உலகத்துக்கு தெரிவித்திருக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? ஆனால், உலக நாடுகளுக்கு அவரைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மன்னிக்கவும். காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான் அவரைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரியவந்தது. அந்தப் படத்தை நாம் தயாரிக்கவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவைப் பற்றி உலகம் நன்கு அறிந்திருந்த நிலையில், மகாத்மா காந்தி அவர்களுக்கு சளைத்தவர் அல்ல. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தை சுற்றி வந்த பிறகு இதைச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.