இமாச்சலபிரதேசத்தின் சிம்லா தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்காஷ்யப்புக்கு ஆதரவாக சிர்மார் மாவட்டம் நஹான் என்ற இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: இமாச்சலபிரதேசத்தில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாநில பணியாளர் தேர்வாணையத்துக்கு மோசடி காங்கிரஸ் அரசு பூட்டு போட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளிடம் வகுப்புவாதம், ஜாதிவாதம் மற்றும் குடும்ப அரசியல் மட்டுமே பொது அம்சமாக உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து அதனை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கொடுக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உங்களின் ஆசிகளைப் பெறவே நான் இங்கு வந்துள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி நேற்று பேசும்போது, “டெல்லியில் இருந்து ஒருவர் (அர்விந்த் கேஜ்ரிவால்) பஞ்சாப் அரசை நடத்தி வருகிறார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உத்தரவுகளை பெறுவதற்காக இவர் திஹார் சிறைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பஞ்சாப் அரசு முடங்கி வருகிறது. 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டவர்களை காங்கிரஸ் அரசு பாதுகாத்து வந்தது. ஆனால் எனது அரசு இந்த கோப்புகளை திறந்தது. குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிப்படுத்தியது” என்றார்.