வெளிநாட்டில் மருத்துவம் படித்தோர் பயிற்சி பெற அனுமதி

வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளை முடித்தோர், தமிழகத்தில் உள்ள, 38 மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் உள்ளுறை பயிற்சி பெற, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து, ஆணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், மருத்துவ கல்லுாரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெறுகின்றனர். கடந்தாண்டு, அங்கீகரிக்கப்பட்ட, அனுமதி பெற்ற, 70 கல்லுாரிகளில், 4,430 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்தோர் அதிகம் உள்ளதால், அதை உயர்த்தும்படி, மாநில மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியது. இதையடுத்து, நாடு முழுதும் மருத்துவ கல்லுாரி அல்லாத மருத்துவமனைகளில், அவர்களுக்கு உள்ளுறை பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில், 38 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்; புதுச்சேரியில் இரண்டு மருத்துவமனைகளில், ஓராண்டுக்கு உள்ளுறை பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓராண்டாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி வழங்கலாம் என, தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் சாம்புசரண்குமார் அனுமதி அளித்துள்ளார்.