அழிவின் விளிம்பில் நடுகல் தொகுப்பு; பாதுகாக்குமா தொல்லியல் துறை

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகேயுள்ள மேலுார் கிராமத்தில், அழிவின் விளிம்பில் உள்ள நடுகல் தொகுப்பை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என, ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஊட்டியில் இருந்து, 32 கி.மீ., தொலைவில் உள்ளது மேலுார் கிராமம். படுகர்களின் வழிபாட்டில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில், இரண்டு நடுகல் சிற்ப தொகுப்புகள் உள்ளன. இவற்றுக்கு அருகில் கட்டடங்கள் கட்டப்படுவதால், இவை சிதைக்கப்படும் அபாயம் உள்ளது. சில நாட்களுக்கு முன், ஊட்டி தாவரவியலாளர் ராஜன், ஊட்டி ஆவண காப்பக இயக்குனர் மதிவாணன் ஆகியோருடன் மேலுாரில் கள ஆய்வு செய்தோம்.

அப்போது, மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில், 12 மற்றும் 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகல் சிற்பத் தொகுதிகளை கண்டறிந்தோம்.

போரிலோ, விலங்குகளுக்கு எதிராகவோ போரிட்டு, தன் உயிரை மாய்த்த வீரர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், நடுகல் எடுப்பது வழக்கம். இங்குள்ள, 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லில் ஒரு வீரன், புலியை குத்துவது போல செதுக்கப்பட்டுள்ளது. அவன் அருகில் குரு, மனைவியர், சொர்க்கம் என, புடைப்பு சிற்பங்கள் உள்ளன.

இதில், 16ம் நாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் மிகவும் சிதைந்துள்ளது. அதில், ஈட்டி, வேல், வில் அம்பு, தீப்பந்தம் போன்றவற்றுடன் சுற்றிலும் வீரர்கள் நிற்க, ஒரு வீரன் வேலால் புலியை தாக்குவது போல உள்ளது. சுற்றிலும் உள்ள சிற்பங்கள், ஒரே வீரனின் வீரத்தைக் காட்டும் சிற்பங்களா அல்லது பல்வேறு வீரர்களின் சிற்பங்களா என்பதில் தெளிவு இல்லை.

மேலும் இதில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் உள்ளது. பொதுவாக நடுகற்கள் சமவெளியில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில், 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, ‘டால்மர்’ என்ற கல் திட்டைக்குள் நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, தமிழகத்திலேயே வித்தியாசமான பழக்கம். நான் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் கள ஆய்வு செய்த போது கண்ட நடுகற்கள் தற்போது இல்லை; அவை சிதைக்கப்பட்டு விட்டன. தற்போது, இந்த நடுகல் தொகுப்புக்கு அருகில் கட்டடப் பணிக்காக மணல் கொட்டப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்கவோ அல்லது பாதுகாப்பான இடத்தில் வைக்கவோ, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஊட்டி அருகேயுள்ள மேலுார் கிராமத்தில் உள்ள நடுகல்.