இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் உட்பட ரூ.33 ஆயிரம் கோடி சரக்கை இறக்குமதி செய்த ரஷ்யா

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதற்கு எதிர்வினையாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்தன. இதனால், ரஷ்யா வெளிநாடு களுடன் டாலரில் வர்த்தகம் செய்வது சிக்கலுக்கு உள்ளானது. இதனிடையே, ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தை டாலருக்குப் பதிலாக ரூபாயில் மேற்கொள்ளும் முடிவை இந்தியா எடுத்தது.

முதற்கட்டமாக ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கும் முயற்சியில் இருநாட்டு வங்கிகளும் இறங்கின. வோஸ்ட்ரோ கணக்குகள்மூலம் இந்திய இறக்குமதியாளர் கள், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை ரூபாயிலேயே செலுத்த முடியும். அதேபோல் ஏற்றுமதியாளர்கள் அவர்களுக்குரிய தொகையை எதிர் நாட்டிலிருந்து ரூபாயிலேயே பெற்றுகொள்ள முடியும்.
ரூபாயில் வாங்கினர்: இந்தப் பரிமாற்றத்துக்காக ரஷ்யா வோஸ்ட்ரோ கணக்குகளில் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை இருப்பு வைத்திருந்தது.

ஆனால், இந்திய ரூபாய்க்கு சர்வதேச மதிப்பு இல்லாத நிலையில், இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்வதை ரஷ்யா தொடரவில்லை. இதனால், வோஸ்ட்ரோ கணக்குகளில் இருந்த பணம் செலவிடப்படாமல் அப்படியே இருந்தது. இந்தச் சூழலில், தற்போது ரஷ்ய இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் உட்பட 4 பில்லியன் டாலர் மதிப்பில் பல்வேறு சரக்குகளை ரூபாயில் வாங்கியுள்ளனர்.