இந்த மக்களவைத் தேர்தல், குடும்ப வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்று தெலங்கானா மாநிலம் புவனகிரியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: ராகுலின் வாக்குறுதிக்கும், பிரதமர் மோடியின் வாக்குறுதிக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. நாட்டில் காங்கிரஸின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. பல தொகுதிகளில் இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.
தெலங்கானாவில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதுவரை அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வங்கிக் கடன் வாபஸ் எனும் அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படவில்லை. நெல், கோதுமைக்கு ரூ. 500 போனஸ் வழங்குவதாக கூறினர். அது என்னவானது ? தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் முழுவதுமாக நிறைவேற்றியதே இல்லை. 70 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்ட அவர்கள் குரல் எழுப்பியதே இல்லை. நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. அதாவது நாட்டின் வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல் யுத்தம். 3-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் மட்டும் பாஜக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். தெலங்கானாவில் கடந்த முறை4 தொகுதிகள், இம்முறை 10 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும்.
மோடி மீண்டும் பிரதமரானால், இட ஒதுக்கீடுகளை ரத்து செய்து விடுவார் என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு இங்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதால், எஸ்டி, எஸ்சி, பிசி பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் என்றென்றுமே நம் இந்திய நாட்டின் அங்கம். ராஜஸ்தான், தெலங்கானா மக்களுக்கும், காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என கார்கே கேள்வி கேட்கிறார். 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் மூவர்ண கொடி பட்டொளிவீசி பறக்கிறது. தீவிரவாதத்தை மோடி தலை தூக்கவிடவில்லை. பிஆர்எஸ், காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிகளுக்கிடையே ரகசிய ஒப்பந்தம் நடந்துள்ளது. ரத்து செய்யப்பட்டமுத்தலாக் முறையை இவர்கள் மீண்டும் கொண்டு வர முயற்சிப்பார்கள்.
பிஆர்எஸ் ஆட்சியில் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமேதெலங்கானாவில் முன்னேற்றம் கண்டது. காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானாவின் கஜானாவை ஏடிஎம் போல் உபயோகித்துக் கொள்கின்றனர். இவ்வாறு அமித் ஷா பேசினார்.