கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்: அமைச்சரின் தனி செயலர் கைது

இம்மாநில ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திரா குமார் ராம், வருமானத்துக்கு அதிகமாக 100 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், வீரேந்திராவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில், ஜார்க்கண்ட் அரசியல்வாதிகளுடன் நடந்த பணப்பரிமாற்ற தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், காங்கிரசைச் சேர்ந்த ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனி செயலர் சஞ்சிவ் லால் வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். தொடர்ந்து, சஞ்சிவ் லாலின் வேலைக்காரர் ஜஹாங்கிர் ஆலம் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டில் ஒரு அறையில் குவியல் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதில், 32 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே, இந்த சோதனைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, அமைச்சர் ஆலம்கிர் ஆலம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கில், சஞ்சிவ் லால் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஜஹாங்கிர் ஆலம் ஆகியோரை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, ஜஹாங்கிர் ஆலம் பயன்படுத்திய ஜார்க்கண்ட் பதிவெண் கொண்ட சொகுசு காரை அமலாக்கத் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், ஒப்பந்ததாரர் ராஜிவ் குமார் தொடர்புடைய ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று நடத்திய சோதனையில், 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

நில அபகரிப்பு வழக்கில், முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காங்கிரசின் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் தொடர்புடைய இடங்களில் பணக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளது, கூட்டணி அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.