பல்கலைக்கழகங்களில் நடக்கும் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து, காங்., – எம்.பி., ராகுல் தெரிவித்துள்ள கருத்து, பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் 181 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அல்லாமல், சில அமைப்பு களுடனான தொடர்புகள் மற்றும் பின்னணியின் அடிப்படையில், துணைவேந்தர்களின் நியமனங்கள் நடைபெறுவதாக, காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது, முற்றிலும் ஆதாரமற்ற கருத்து. இதுபோன்ற கருத்துக்களை திட்டவட்டமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களது கல்வித்தகுதி, பணி சார்ந்த பின்புலம், அனுபவம் ஆகியவையே, நாங்கள் எந்த அடிப்படையில் இந்த பதவிக்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டோம் என்பதை தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்த உண்மைகளை மறைத்து, அதன் வாயிலாக தங்களுக்கு ஏற்ற வகையில் பொய் கதைகளை பரப்பும் வேலையில் ஈடுபட்டவர்கள், தயவு செய்து ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு கோருகிறோம். நாட்டிலுள்ள மதிப்பு மிக்க பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும். துணைவேந்தர் அலுவலகங்களின் மாண்பை, அவமதிக்கும் வகையில் ராகுல் பேசியுள்ளார். அவர் பேசியது அனைத்தும் பொய். தன் பேச்சின் வாயிலாக அரசியல் லாபத்தை எட்டவேண்டுமென்பதே அவரது நோக்கம். எனவே அவர் மீது, உரிய முறையில் சட்டப்படியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.