சாலை ஓரம் ஒரு அனுமார் கோயில். வெயில் தாங்க முடியாமல் போய் ஒரு பக்தர் வந்து நின்று, “ஆஞ்சநேயப் பெருமானே, சிறுவயதில் சூரியனை விழுங்க முயற்சி செய்தீர்களாமே, அந்த மாதிரி மறுபடியும் இப்ப சூரியனை கொஞ்சம் விழுங்குங்க, ஐயா” என்று வேண்டிக் கொள்கிறார் – இப்படி சமூக வலைதளத்தில் ஒரு துணுக்கு
ஒவ்வொரு ஊரிலும் வெயில் கொடுமையால் மக்களுக்கு உஷ்ணக் கொப்புளம் அதிகரிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்குமாம். அப்போது நம்மால் தாங்க முடியமல் போகலாம். நம் குழந்தைகளைக் காப்பாற்று
வதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். ‘நடப்பது நடக்கட்டும் என்று நாம் வரிந்துகட்ட வேண்டியதுதான், வேறு வழி இல்லை’ என்று தோன்றிவிட்டதா? வாருங்கள், வாசகர்களே!
வரும் ஆவணியில் மழைக் காலம் தொடங்கும். தமிழகத்தில் 10 கோடி மரக் கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம். ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் மரக் கன்றுகள் நடுவதற்கு 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க முதல் காரியமாக கோரிக்கை வைப்போம். ஊர்கூடி பசுமைத் தேர் புறப்பாடு நடத்துவோம்!
மரக் கன்று விற்போர், வனத் துறையினர், பள்ளிகளின் தாளாளர்கள், உயர் பதவிகளில் இருப்போர், பிரபலங்கள், ஆன்மிக ஆன்றோர், கிராமத் தலைவர்கள், ஊர்த் தலைவர்கள், அனைத்து சமூகங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி செயல்படச் செய்ய முயற்சி தொடங்குவோம்.
அவரவர் ஊரில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் தொடங்குவோம். கிராமங்களில் இன்னும் அதிக மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுவோம். இதற்கான வாட்ஸ்அப் குரூப்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே தொடங்கி, மரக்கன்று கிடைக்குமிடம், மரக்கன்று நட தோதான இடங்கள் போன்ற தகவல்களை பரிமாறி வருவோம்.
நம் வீட்டைச் சுற்றி முடிந்த அளவிற்கு மரக்கன்றுகளை நடுவோம்., மரக் கன்றுகள் வாங்கிக் கொடுப்போம். மரக்கன்றுகள் நட பல விதங்களில் உதவுவோம். மரக் கன்றுகள் தேவைக்கு நம் அருகில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்வோம்.
சராசரியாக ஒரு குடும்பம் 10 மரக் கன்றுகள் நட்டு வளர்க்க முடியுமானால் மாநிலத்தின் எட்டு கோடி மக்களில் ஒரு கோடி குடும்பங்கள் களமிறங்கும் போது 10 கோடி மரங்கள் என்ற கனவு நனவாகிடக் காண்போம். ஒவ்வொரு மரக் கன்றிற்கும் ஒரு வருட காலம் தினமும் 1 லிட்டர் நீர் ஊற்றி வந்தால் போதும். இதே போல சில வருடங்கள் செய்தால், ஆண்டு 2030 க்குள் தமிழகம் குளிர்ந்து போகும்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலின் புறநகர் சந்தை நடுவிலிருந்த திடலில் தேசிய அன்பர்கள் குழு ஒன்று வேப்பங்கன்று நட்டு சில ஆண்டுகள் வரை காப்பாற்றி வந்தது. ஓங்கி வளர்ந்த வேம்பின் அடியில் சிலர் கடை பரப்பி வியாபாரம் செய்யுமளவு அந்த மரம் நிழல் தந்தது. தகவலறிந்த அன்றைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மரக்கன்று நட்ட குழுவினரை அழைத்துப் பாராட்டினார் என்று நினைவுகூர்கிறார் நமது போபால் வாசகர் ஜெ. சந்திரசேகரன்.
முத்தாய்ப்பு
பாரத மாதாவின் பாத மலரை, தமிழகத்தை, நமது ஆறு ஆண்டுத் தவத்தால் பசுமை கொண்டு அலங்காரம் செய்து 2030 ல் ஆனந்தம் அடைவோம். இனி வரும் கோடைகளின் வெப்ப அலைகளில் இருந்து நம்மையும் நம் பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வோம்.
விஸ்வாமித்திர முனிவரின் யாகத்தை அரக்கர்களின் தாக்குதலிலிருந்து ராமபிரானும் தம்பி லட்சுமணரும் ஆறு நாட்கள் கண்ணினைக் காக்கின்ற இமை போலக் காத்தார்கள் என்று பேசுகிறது கம்ப ராமாயணம். நாமும் ராமன் ஆவோம், லட்சுமணன் ஆவோம் … இன்று நாம் ஏந்த வேண்டியது வில்லையும் அம்பையும் அல்ல; மரக்கன்றுகளையும் பூவாளிகளையும்தான்! இதுவும் வெப்ப அலை மீதான ஒரு போர் போலத்தான், அல்லவா?
தகவல் : கா. சீனிவாசன்