வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுச் சாவடிக்கு சென்றவர்களில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. ஓட்டளிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பா.ஜ., சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தால் அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொது தகவல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்ற முகவரிக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், அதற்கான காரணத்தை கேட்டு மனு செய்யும்படி ஒரு தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். தகவல் கோரி விண்ணப்பிக்க வேண்டிய படிவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி காரணத்தை கேட்டு விண்ணப்பிக்க பலரும் தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. இது தேர்தல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் வழக்கமாக ஓட்டுப் பதிவோடு அதை மறந்து விடுவர். தற்போது பெயர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் மனு செய்ய துவங்கினால் ஒவ்வொரு மனு மீதும் விசாரணை நடத்தி அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிக்கல்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.