தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக அளிக்கப்படும் புகார் தொடர்பாக மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என தேர்தல் துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஏப்.19-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லை என்று ஒரு சாராரும், நீக்கப்பட்டிருப்பதாக ஒரு சாராரும் தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அக்ரஹாரம் ஒன்றில் வசிக்கும் மக்கள் தங்கள் பெயர்நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து,வாக்குவாதம் செய்தனர். கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் புகார்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் முடிந்த மாநிலங்களின் எல்லைப்பகுதியில் உள்ள கண்காணிப்பை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் (இஆர்ஓ)பொறுப்பாவார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்து, சேர்க்கப்பட்ட பெயர்கள், நீக்கப்பட்ட பெயர்கள், முகவரி மாற்றம் இவை தொடர்பான விவரங்களை அவர் அளிப்பார். இந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் அந்தந்தப் பகுதியில் உள்ள முகவர்களுக்குத் தெரியும். இதுதவிர, பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைப் பார்க்கமுடியும். அத்துடன், பெயர் சேர்த்தல், நீக்கல் விண்ணப்பங்களையும் அளிக்க முடியும்.
வாக்காளர் பட்டியலில் பெயர்நீக்கப்பட்டுள்ளது தொடர்பான புகார்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டாலோ, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளிக்கப்பட்டாலோ, அந்த புகார்கள் வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்வார்கள். இப்பணிகள் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும் தொடங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தாலும், முகாமில் விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தாலும், அவை யாரால் பரிசீலிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது என்ற விவரம்இருக்கும். மேலும், நீக்கப்பட்டிருந்தால் நீக்கத்துக்கு பரிந்துரைத்தவர் விவரமும் இருக்கும். எனவே, அதைக்கொண்டு என்ன நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள இயலும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார்இணைப்பு, கைபேசி எண் இணைப்பு தொடர்பான நீதிமன்றஅறிவுறுத்தல்கள் உள்ளன. தற்போது ஆதார், கைபேசி எண்பெறப்பட்டாலும், இணைக்கப்படுவதில்லை. இவ்வாறு இணைக்கப்பட்டால், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இரட்டை பதிவுகள் நீக்கப்படும். ஒருவர் பெயர்பட்டியலில் இருந்து நீக்கப்படும்போது கைபேசியில் தகவல் தெரிவிக்கவும் ஏதுவாக இருக்கும்.
கண்காணிப்பு: தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு கண்காணிப்பு அகற்றப்பட்டு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைப்பகுதிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, எந்த மாநிலத்தில் தேர்தல் முடிகிறதோ அந்த மாநில எல்லையில் கண்காணிப்பை அகற்றும் வகையில் மாவட்ட தேர்தல்அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வேளை அந்த மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றால் தேர்தல் முடியும்வரை கண்காணிப்பு தொடரும். இவ்வாறு தெரிவித்தார்.