மக்களவை தேர்தலின் போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 134-வது வார்டின், 13-வது வாக்குச் சாவடியில், முகவராக இருந்த பாஜக நிர்வாகி கவுதமனை, திமுகவினர் தாக்கியதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கவுதமின்வீட்டுக்கு சென்ற குடிநீர் வாரிய அதிகாரிகள், அவரது வீட்டில் கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி ( சம்ப் ) இருக்கிறதா என பார்வையிட்டதாக கூறப்படுகிறது.
இதையொட்டி கவுதமன் வீட்டுக்கு சென்று, நடந்தவற்றை கேட்டறிந்த தமிழிசை பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு அதிகாரிகளை வைத்து மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கவுதம் ஒரு பழங்குடியின வகுப்பை சார்ந்தவர். ஆனால் அவர் பாஜக ஆதரவாளர் என்பதாலே உயர் சாதியினர் என எண்ணி திமுக சாதி அரசியலை கையில் எடுத்து செயல்படுகிறது. கவுதமன் வீட்டில் பம்ப் வசதி தான் உள்ளது.
ஆனால் குடிநீர் அதிகாரிகள் அவரது வீட்டில் சம்ப் இருந்தால் அதனை துண்டிக்க வந்திருப்பதாக கூறி இருக்கின்றனர். ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தால் உடனே மின்சாரம், தண்ணீரை எல்லாம் துண்டிப்பார்களா? திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது இது போன்ற மிரட்டல் அரசியலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எனவே, அரசாங்க அதிகாரிகளை வைத்து இத்தகைய நாடகங்களை நடத்த வேண்டாம் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இனியும் நடந்தால் பாஜக சும்மா இருக்காது என்றார்.