தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மற்றும் கூட்டாளிகள் நான்கு பேர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஓட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில், 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றினர்.
ஜாபர் சாதிக் வீட்டில், மேலும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக், லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், சென்னையில் தங்கி படிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை குறிவைத்து, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு புரோக்கர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சங்கங்களின் நிர்வாகிகள் செயல்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன’ என்றனர்.