லோக்சபா தேர்தல் முடிந்ததும் வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை துவங்கி, வள்ளலார் பக்தர்களுக்கு, தி.மு.க., அரசு நம்பிக்கை துரோகம் செய்வதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: கடலுார் மாவட்டம், வடலுாரில் மக்கள் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. பன்னாட்டு மையப் பணிகளை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தடுக்க, காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்; இது கடும் கண்டனத்திற்குரியது.
பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக கூறியிருந்த தமிழக அரசு, லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் கட்டுமானப் பணிகளைத் துவங்கியிருப்பது, மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர். பெருவெளியை, ஜோதி தரிசனத்தை காண்பதை தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று வள்ளலாரே வலியுறுத்திஇருக்கிறார்.
பன்னாட்டு மையம் அமைக்கத் துடிப்பது ஏன் என, சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை, கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.