திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சராசரியாக, தலா 1.5 லட்சம் ரூபாய் மானியத்தில், 46 பேருக்கு மாட்டு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
தரமற்ற பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டு, இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழல் அதிகாரிகளுக்கு, ‘பாராட்டு விழா’ நடத்த முடிவு செய்தனர். நேற்று காலை நாதஸ்வரம், மேளம் இசைக்க, மாடுகளுடன் விவசாயிகள் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக ஒன்றிய அலுவலகம் நோக்கி சென்றனர்.
ஊழல் அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து சீர்வரிசை பொருட்களை ஒப்படைப்பதற்காக சென்ற அவர்களை, பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார் தலைமையில் அவிநாசிபாளையம் போலீசார் தடுத்து நிறுத்தினர். ‘உள்ளே சென்று பாராட்டு விழா நடத்த அனுமதிக்க முடியாது. நீங்கள் கலெக்டரிடம் பேசி தீர்வு காணுங்கள்’ என்று டி.எஸ்.பி., தெரிவித்தார்.
இதனால், விவசாயிகள் ஒன்றிய அலுவலகம் முன் சீர்வரிசை பொருட்களை இறக்கி வைத்து, ‘ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்திற்கு சீர்வரிசை பொருட்களுடன் சென்று பாராட்டு விழா நடத்துவோம்’ என்று கூறி, சிறிது நேரம் கோஷம் எழுப்பினர். பின், கலைந்து சென்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘மாட்டு கொட்டகையை ஆய்வு செய்து, தரமற்ற தளவாடங்களை அகற்றி, தரமான பொருட்களை வைத்து மீண்டும் கட்டி தர வேண்டும். ஊழல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மாநில பொதுச்செயலர் முத்து விஸ்வநாதன், சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலர் சதீஷ்குமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலர் பரமசிவம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலர் கோகுல் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.