மேற்குவங்க அரசு பள்ளிகளில் 25,753 ஆசிரியர், அலுவலர் நியமனங்களை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
மேற்குவங்க கல்வித் துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர் பணி சார்ந்த காலியிடங்களை நிரப்ப கடந்த 2014-ம் ஆண்டில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணி நியமனங்கள் நடைபெற்றன. இதன்படி சுமார் 26 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
இந்த பணி நியமனத்தில் சில ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஒரு நபருக்கு தலா ரூ.15 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசு பணி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மோசடி நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி 2022-ம் ஆண்டு ஜூலையில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது. அவர் தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.49 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்னாள் அதிகாரி சாந்தி பிரசாத் சின்ஹாவின் ரூ.230 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்களின் ரூ.135 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டன.
மேற்குவங்க உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. கடந்த மார்ச் மாதம் வாதங்கள் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு அமர்வு நீதிபதிகள் தேவாங்சு பஸாக், முகமது ஷப்பார் ரஷிதி நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
மேற்குவங்க பள்ளிக் கல்வித் துறை நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே கடந்த 2016-ம் ஆண்டில் குரூப் சி, குரூப் டி, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பணி நியமனங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதன்படி ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 25,753 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இதுவரை பெற்ற ஊதியத்தை, ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் 6 வாரங்களுக்குள் அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும்.
கடந்த 2016-ம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற 25,753 பேரின் தேர்வுத் தாள்களை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும். இதன்படி தகுதி அடிப்படையில் புதிய ஆசிரியர்கள், அலுவலர்களை பணியில் நியமிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியை சோமாதாஸ், மேற்குவங்கத்தின் பிர்பூமில் உள்ள மதுரா உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். மனிதாபிமான அடிப்படையில் அவரதுபணி நியமனம் மட்டும் ரத்துசெய்யப்படவில்லை. அவருக்குமட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.