வாக்காளர்கள் நீக்கம் திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு என பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: மக்களவைத் தேர்தலில் கோவையில் உள்ள 2,048 வாக்குச்சாவடி களிலும் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் நீக்கப்பட்டிருக் கிறார்கள் என்ற செய்தி, அன்றைய தினம் 12 மணியளவில் வெளியானது. இதனால், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்களிக்க முடியாமல் பலர் திகைத்து நின்றபோதே தெரிந்தது. இவர்கள் அனைவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாக்களித்து வருபவர்கள். சொந்தவீட்டில் வசித்து வருபவர்கள்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தும் மௌனம் காத்து கூட்டுச்சதி செய்துள்ளார்கள். ஏனென்றால் இவர்கள் வாக்குகள் இக்கட்சிகளுக்கு விழாது. இது திமுகவின் விஞ்ஞான முறைகேடு. அதில் உச்சகட்டமே கவுண்டம் பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி எண் 214அங்கப்பா பள்ளியில் 823 வாக்காளர் கள் நீக்கப்பட்டிருப்பதுதான்.
அதேபோல் தெப்பக்குளத்தில் வாக்குச்சாவடி எண் 158-ல் 40 வாக்குகளும்,157-ல் 45 வாக்குகளும்,156-ல் 20 வாக்குகளும், 155-ல் 40 வாக்குகளும்,154 –ல் 30 வாக்குகளும்,153-ல் 25 வாக்குகளும் என 200 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதுபோல கோவையில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 1,353 வாக்குகள் இருந்த அங்கப்பா மேனிலைப்பள்ளியில் 823 வாக்குகள் குறைந்தபோதே விழித்திருக்க வேண்டிய மாவட்டநிர்வாகம் மவுனம் காத்து திமுகவின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணைபோயிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மனுகொடுக்க முற்பட்டபோது அங்கு காத்திருந்த வழக்கறிஞர்களை நீண்டநேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பு புகார் மனுவை பெற்றுக்கொண்டதே திமுகவின் முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகம் துணைபோகிறது என்பதற்கு சாட்சி. ஆனால், பாஜக இத்துடன் விடாது. ஜனநாயக ரீதியாக தொடர்போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார்.