டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பில் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றி சேவை செய்த 5 பேருக்கு விருது

டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பில் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றி சேவை செய்த 5 பேருக்கு விருது வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்-ன் ஒரு அங்கமான டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சமுதாய நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவுக்கு ராமகிருஷ்ண மிஷன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.சுகுமாரன், துளசிதாஸ் பவுண்டேஷன் நிறுவனர் வி.டி.பிரதீப்குமார், வட தமிழகம் ஆர்எஸ்எஸ் மாநில இணை செயலாளர் ஏ.ராமகிருஷ்ண பிரசாத்,முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளை தலைவர் எம்.கே.ஆர்.மோகன் உள்பட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி, சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளை களைந்து, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சேவை செய்துவரும், ஸ்ரீ ரங்க பராங்குச பரகால ராமானுஜமடம் மடாதிபதி பிள்ளை நரசிம்மப்பிரியா, டாக்டர் அம்பேத்கர் பொதுநல மன்றத்தின் தலைவர் பகத்சிங்,டாக்டர் அம்பேத்கர் டியுஷன் சென்டர் (வியாசர்பாடி) நிறுவனர் சுகன்யா, டாக்டர் அம்பேத்கர் மன்றம் டியூஷன் சென்டர் (பெரம்பூர்) நிறுவனர் வி.சூரியகுமார், சிவபண்டார வழிபாடு நீத்தார் கடன் மற்றும் முத்தி வழிபாடு அருள் சேவகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட தமிழகம் ஆர்எஸ்எஸ் மாநில இணை செயலாளர் ஏ.ராமகிருஷ்ண பிரசாத் பேசியதாவது: சமுதாயத்தில் எதிர்மறையான விஷயங்கள்தான் தற்போது அதிகம்வெளியே தெரிகிறது. ஆனால், நமதுசமுதாயம் உண்மையில் அவ்வாறு இல்லை. நேர்மறையான விஷயங்களும் அதிகம் சமுதாயத்தில் இருக்கிறது.
அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. டாக்டர் ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகளை விதைத்திருக்கிறார். சமுதாயத்தில் இன்றைக்கும் நல்ல விஷயங்கள் செய்யக்கூடியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அனைவரையும் மதிக்க வேண்டும். இதைத்தான் அம்பேத்கரும், டாக்டர் ஹெட்கேவாரும் கூறுகிறார்கள். இந்து தர்ம கொள்கையும் அதைதான் சொல்கிறது. அனைவருக்குள்ளும் இறை தன்மை உள்ளது. அதனால், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என யாரும் இல்லை.
நாம் உள்வாங்கும் விஷயங்கள் எதிர்மறையாக இருக்கும்போது அதுநமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.சமுதாயத்தில் அற்புதமான விஷயங்கள் ஏராளமாக நடக்கின்றன. அதனைஉள்வாங்கினால், நமது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனவே,சுயநலம் இல்லாமல், மற்றவர்கள் செய்யக்கூடிய நல்ல விஷயத்தையும் நாம் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.