2023-24 நிதி ஆண்டில் மத்திய நேரடி வரி வசூல் ரூ.19.58 லட்சம் கோடி: இலக்கை விட 7.40% அதிகம்

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் ரூ.18.23 லட்சம் கோடி நேரடி வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில், தற்போது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப் பட்டஅளவை விட ரூ.1.35 லட்சம் கோடி கூடுதலாக வரி வசூலாகியுள்ளது.
மொத்த வரி வசூல்: 2023-24 நிதி ஆண்டின் மொத்த நேரடி வரி வசூல் ரூ.23.37 லட்சம் கோடியாக உள்ளது. ரீபண்ட்டுக்குப் பிறகான நிகர வரி வசூல் ரூ.19.58 லட்சம் கோடி ஆகும். 2022-23 நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.19.72 லட்சம் கோடியாகவும், ரீபண்ட்டுக்குப் பிறகான நிகர வரி வசூல் ரூ.16.64 லட்சம் கோடியாகவும் இருந்தது. அந்த வகையில் 2022-23 நிதி ஆண்டுடன் ஒப்பிட 2023-24 நிதி ஆண்டில் நிகர நேரடி வரி வசூல் 17.70% அதிகரித்துள்ளது.
தனிநபர் வருமான வரி: தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி உள்ளிட்டவை நேரடி வரி வகையின் கீழ் வருபவை. 2023 -24 நிதி ஆண்டில் நிகர தனிநபர் வருமான வரி வசூல் ரூ.10.44 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.23% அதிகம். அதேபோல் நிகர கார்ப்பரேட் வரி வசூல் ரூ.9.11 லட்சம் கோடியாக உள்ளது. இது 10.26% அதிகம் ஆகும். 2023 -24 நிதி ஆண்டில் ரூ.3.79 லட்சம் கோடி வரி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 22.74% அதிகம் ஆகும்.