மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலிக்கு செல்ல முயன்ற, ஓய்வுபெற்ற பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின், சந்தேஷ்காலி என்ற பகுதியைச் சேர்ந்த ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக், தன் ஆதரவாளர்களோடு இணைந்து, அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கும் மேல், ஷாஜஹான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரம், மேற்கு வங்க அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஓய்வு பெற்ற பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர், சந்தேஷ்காலிக்கு நேற்று புறப்பட்டனர். இந்த குழுவில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜ் பால் சிங், தேசிய மகளிர் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் சாரு வாலி கண்ணா உள்ளிட்ட ஆறு பேர் இடம் பெற்றனர்.
இந்தத் தகவலை அறிந்த போலீசார், போஜெர்ஹாட் பகுதியில் இந்த குழுவினரை தடுத்து நிறுத்தினர். சந்தேஷ்காலியின் ஒருசில இடங்களில், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அங்கு செல்ல அனுமதி இல்லை என, உண்மை கண்டறியும் குழுவினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நரசிம்ம ரெட்டி உட்பட ஆறு பேரும் வாகனத்தில் இருந்து இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார், பின்னர் விடுவித்தனர்.
இது குறித்து, உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் நரசிம்ம ரெட்டி கூறியதாவது:
சந்தேஷ்காலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எங்களை தடுத்து நிறுத்தியது சட்ட விரோதமானது. அந்தப் பகுதியில் பெண்கள் அனுபவித்த துயரங்களை கேட்டறிய, எங்கள் குழுவில் உள்ள பெண்களையாவது அனுமதித்து இருக்கலாம். ஜனநாயகத்துக்கு விரோதமாக போலீசார் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, சந்தேஷ்காலியில் திரிணமுல் நிர்வாகி ஷிபாபிரசாத் ஹஸ்ராவின் கோழிப்பண்ணை எரிக்கப்பட்ட புகாரில், ஐ.எஸ்.எப்., தலைவர் ஆயிஷா பீபியை போலீசார் நேற்று கைது செய்தனர்.