அண்டை நாடான நேபாளத்தின் தெராய் பகுதியிலும், பிகாரிலும் பெய்த பலத்த மழை காரணமாக, மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. மழை தொடர்பான சம்பவங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் உயிரிழந்தனர். இதனால், பிகாரில் உயிரிழப்பு 92-ஆக அதிகரித்துள்ளது. இதில், சீதாமரி மாவட்டம் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக, அந்த மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துவிட்டனர். இதேபோல், அராரியா, மதுபனி, புர்னியா, ஷேவ்கர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாமிலும் வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களைச் சேர்ந்த 48.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,79 லட்சம் ஹெக்ளடர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேபோல், காண்டாமிருகங்கள் சரணாலயமான காஸிரங்கா தேசிய விலங்கியல் பூங்கா, பபித்ரோ வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாநிலத்தில் வெள்ளிக்கிழமை துப்ரி மாவட்டத்தில் 5 பேர், பார்ளபடா, மோரிகான் மாவட்டங்களில் தலா 3 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இதனால், மழை வெள்ளம் காரணமாக மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது. 3,705 கிராமங்களில் வசிக்கும் 48.87 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.