மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் 6-வது சம்மனுக்கும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை

மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அண்மையில் 6-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர், துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை அளித்தார். அதன்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.
புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21, கடந்த ஜனவரி 3, 17, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் ஆஜராகவில்லை. கடந்த 17-ம் தேதி அமலாக்கத் துறை சார்பில் 6-வது முறையாக முதல்வர் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அன்றைய தினமே விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியிருந்தது. ஆனால் 6-வது சம்மனுக்கும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறும்போது, “கேஜ்ரிவாலை கைது செய்ய மத்தியில் ஆளும் பாஜக சதி செய்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கவும் முயற்சி செய்கிறது. அமலாக்கத் துறை சம்மன்கள் சட்ட விரோதமானவை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்’’ என்று கூறின.
அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “ஆறு முறை சம்மன் அனுப்பியும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை. 7-வது முறையாக சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பிஎம்எல்ஏ சட்டவிதிகளின்படி தொடர்ச்சியாக சம்மன்களை புறக்கணிக்கும் நபரை கைது செய்ய முடியும்’’ என்று தெரிவித்தன.