தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தள்ளிப்போக வாய்ப்புள்ளது என அக்கட்சியினர் தெரிவித்தனர். தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் பா.ஜ.,வின் வேகம் கூடுதலாக உள்ளது. கூட்டணிக்கு முக்கிய கட்சிகள் வரத் தயங்கும் நிலையிலும் தேர்தல் பணிகளை பா.ஜ., தரப்பில் துவங்கி விட்டனர்.
இதற்கிடையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், ‘என் மண்: என் மக்கள்’ யாத்திரை பிப்., 25ல் திருப்பூரில் நிறைவடைய உள்ளது. நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை பங்கேற்க செய்ய தமிழக பா.ஜ., சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூடவே, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அன்று மாலை பிரதமரை வைத்து, பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டதுஇதற்காக 1,500 ஏக்கர் மைதானத்தை தயார்படுத்தும் பணியில் கட்சியின் மாநில செயலர் முருகானந்தம் இறக்கி விடப்பட்டார். குறிப்பிட்ட அந்த மைதானம் புதர் மண்டிக் கிடப்பதால், அதை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதை முழுமையாக செய்து முடிக்க, 20 நாட்களாவது தேவைப்படும் என்பதால், பொதுக்கூட்டத்தை தள்ளி வைக்கலாமா என யோசிக்கின்றனர்.
இதற்கிடையில் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதால், அதற்கும் நாட்கள் தேவைப்படுகிறது. அதனால், பல்லடம் பொதுக்கூட்டத்தை மார்ச் முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, அண்ணாமலை பாதயாத்திரை பயண திட்டத்தில் மதுரை மேற்கு தொகுதி விடுபட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் யாத்திரையில் ஈடுபட்ட அண்ணாமலை, மேற்கு தொகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மட்டும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது பாதயாத்திரையையும் நடத்தி, பின், பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 23 காலை மதுரை புட்டுத்தோப்பில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக அல்லது வில்லாபுரத்தில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் வழியாக பழங்காநத்தம் வரை பாதயாத்திரை சென்று, அங்கு நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தேர்தல் தொடர்பாக வரும் 20ல் சென்னையில் பா.ஜ., ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் பிரிவுக்கான பயிற்சிப் பட்டறை நடக்க உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரிபங்கேற்கிறார்.