பழநி கோயிலில் காலாவதியானதால் ஆயிரக்கணக்கான பஞ்சாமிர்த டப்பாக்கள் அழிப்பு

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரண நாட்களில் தினமும்20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகும். சபரிமலை ஐயப்ப சீசன் மற்றும் தைப்பூசத் திருவிழா காலத்தில் தினமும் ஒரு லட்சம் டப்பாக்கள் விற்பனையாகும்.
கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் வருகை அதிகரிப்பால், தேவஸ்தான பஞ்சாமிர்தத்துக்கு கடும்தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கும்வகையில், தினமும் வழக்கத்தைவிட கூடுதலாக 50 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் தயார் செய்யப்பட்டன.
ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்தது. இதனால் ஜன. 29 முதல் 31-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகாமல் தேங்கின.
பஞ்சாமிர்த டப்பாவில் குறிப்பிட்ட தேதியில் இருந்து 15 நாட்கள்வரை பயன்படுத்தலாம். ஆனால், ஜன. 29 முதல் 31 வரை தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் காலாவதியானது. இதையடுத்து, ஸ்டால்களில் இருந்த ஆயிரக்கணக்கான பஞ்சாமிர்த டப்பாக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவை ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் உள்ள பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டன. விற்பனையாகாத பஞ்சாமிர்த டப்பாக்களால் ரூ.20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழநி கோயிலில்தரமில்லாத பிரசாதம் விற்கப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.