ஏ.ஐ., துறையில் உயரம் தொட்ட ஒட்டன்சத்திர கிராமத்து பெண் கீர்த்தனா

 

இது ஒரு கிராமத்து பெண்ணின் வெற்றிக்கதை. மிகச் சிறிய கிராமத்தில் இருந்தும் கூட, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை, பெண்களின் மனதில் விதைக்கக்கூடிய உண்மை சம்பவம். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள விருப்பாட்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா. பால்காரரின் மகளான இவர், கடினமான வீட்டு வேலைகளுக்கு நடுவே, கல்வி கற்பதை விடாமல் தொடர்ந்தார்.

 

ஒரு கட்டத்தில், பழனி மலை அடிவாரத்தில் உள்ள கருச்சாமி கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் குடியேறினார். அங்கு, ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றிக் கொண்டே, குடும்பத்தையும் கவனித்தபடி கல்வியை தொடர்ந்தார். தகவல் தொழில்நுட்ப துறையில் பல உயரங்களை தொட வேண்டும் என்பது கீர்த்தனாவில் லட்சியம். ஆனால் எங்கு ஆரம்பிப்பது என்பது புரியாத புதிராகவே இருந்தது. முதல்படியாக, ‘டேட்டா என்டரி’ வேலையை பகுதி நேரமாக செய்ய துவங்கினார்.

அப்போது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் இந்த உலகை ஆளப்போகிறது என்பதை உணர்ந்தார். அந்த நேரத்தில் தான் கொரோனா பெருந்தொற்று பரவ துவங்கியது. உலகம் முழுதும் அத்தனை துறைகளும் ஸ்தம்பித்தன. இந்த இடைவெளியை தன்னை பட்டை தீட்டிக்கொள்ள பயன்படுத்திய கீர்த்தனா, மடிக்கணினி ஒன்றை இரவலாக பெற்றார். அதில், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பங்கள் குறித்து தானாக கற்க துவங்கினார்.

‘ஆன்லைன்’ வகுப்புகள் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு, ‘போட்டோ ஷாப்’ நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை கற்று தேர்ந்தார். இந்த நேரத்தில் தான் கீர்த்தனாவின் வாழ்வில் வாய்ப்பு கதவை தட்டியது. கோவையை சேர்ந்த, ‘இனோவேட்டஸ் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனம், கீர்த்தனாவை அணுகியது. இதன் ஒரு அங்கமாக கீர்த்தனாவும் இணைந்தார். இதில் பணிபுரியும் 15 பணியாளர்களும், தங்கள் வீடுகளில் இருந்தபடியே பங்களிப்பை அளித்து வருகின்றனர். புதிய சிந்தனை உடைய அந்த குழு கீர்த்தனாவையும் தங்களுடன் இணைத்துக் கொண்டது.

விருப்பாட்சி என்ற சிறிய கிராமத்தில் இருந்து தன் சொந்த முயற்சியால், செயற்கை நுண்ணறிவு துறையில் குறிப்பிடத்தக்க உயரங்களை, கீர்த்தனா இன்றைக்கு தொட்டுள்ளார். இதுவே புதிய இந்தியாவின் துவக்கம். நீங்கள் பிறந்தது சிறிய நகரமோ கிராமமோ, வாய்ப்புகளுக்கு எல்லை இல்லை. தடைகளை உடைத்தெறிந்து கீர்த்தனாவை போல மேலெழுந்து வர ஆர்வமுள்ள பெண்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.