கும்பகோணத்தை புனித நகரமாக அறிவித்து புண்ணியம் தேடி கொள்ள வேண்டும்: இல.கணேசன்

”தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை புனித நகரமாக அறிவித்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்,” என, நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பேசினார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 127ம் ஆண்டு கும்பகோணம் விஜய விழா நேற்று நடந்தது.

கவர்னர் இல.கணேசன் பங்கேற்று, விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின், அவர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் பேசிய இடத்தில் நின்று பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். மனிதனுக்கு என்று இயல்பு உள்ளது. அது இல்லாவிட்டால் அவர்கள் மிருகங்களுக்குச் சமம். அடுத்தவர் கஷ்டத்தைப் பார்த்து, அவருக்கு வேண்டியதைத் தானாக முன் வந்து கொடுப்பது தான் இயல்பாகும். இந்த குணம் இருந்தால் தான் மனிதன். இந்த மனிதனை உருவாக்க வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார். இதை போல சுவாமி விவேகானந்தர், பாரத நாடு உலக அரங்கத்தில் உயர வேண்டும் என கனவு கண்டார்; அந்த கனவு இன்னும் பூர்த்தியாகவில்லை.

இதனால் மாணவர்கள் எடுக்கக்கூடிய பொறுப்பு என்னவென்றால், விவேகானந்தர் கண்ட கனவை நினைவாக்கும் வகையில், நம் நாடு மேலோங்கிய தேசமாக வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும். இதை தான் பிரதமர் மோடியும் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி சொன்னது போல, தற்போது அமிர்த காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு வரும் போது, தேசத்திற்கு பொற்காலம்.

மேலும், உலக அரங்கில் இந்தியா உயர்ந்திருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை. தமிழகத்தில், கும்பகோணத்திற்கு சிறப்பு என்னவென்றால் ஊரே கோவிலாக உள்ளது. எனவே, தான் கோவில் மாநகரமான இதை, புனித நகரம் என்கிறோம். புராதனமான இந்த நகரத்தை புனித நகரமாக யார் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும், புராதன நகரம் தான். இதை புனித நகரமாக, அரசு அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.