நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சமா? – உள்நோக்கத்துடன் மாநிலங்கள் புகார் கூறுகின்றன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் உள்நோக்கம்கொண்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் அளித்த பதில்: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அது, அரசியல் ரீதியாக தூண்டப்படும் குற்றச்சாட்டு. மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், இதுபோன்ற சூழல் ஏற்பட வாய்ப்பு இல்லை. நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படியே மத்திய அரசு செயல்படுகிறது.
எனவே, மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை எந்தவொரு நிதியமைச்சரும் தன்னிச்சையாக தலையிட்டு நிறுத்தி வைக்க முடியாது என்பதே நிதர்சனம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
இதனிடையே இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடக மாநிலத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகடெல்லியில் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயை உருவாக்கி தருவதில் கார்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் நிதிப் பகிர்வின்போது பாதிக்கப்படுவது நமது மாநிலமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடகா புறக்கணிக்கப்படுகிறது. இது நியாயமற்றது’’ என்று கூறியுள்ளார்.