லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. எனவே, மிகப்பெரிய மக்கள் தொடர்பு சந்திப்பை ஏற்படுத்த கிராமங்களில் தங்கியும், மகளிர் குழுக்களை சந்தித்தும் பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுமாறு தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுதும், பிப்., 1ம் தேதி முதல் மூன்றாவது வாரம் வரை, ‘சக்தி வந்தனம்’ என்ற பெயரில், 1 கோடி மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக, 10 கோடி பெண்களை, பா.ஜ., மகளிரணியினர் தொடர்பு கொள்வர்.
தமிழகத்தில் மகளிர் குழுக்களை சந்திக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 25 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் பா.ஜ., பெண் நிர்வாகிகள், சுய உதவி குழுவை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களை சந்தித்து, பிரதமர் மோடி பெண்களுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி எடுத்து கூறுவர். இதுதொடர்பாக எப்படி நடக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு ஏற்கனவே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி, 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு, ‘முத்ரா’ கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ‘கிராமங்கள் தோறும் இயக்கம்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிர்வாகியும் நான்கு நாட்கள் தங்களுக்கு ஒதுக்கிய கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
ஒரு நாள் இரவு கிராமத்திலேயே தங்க வேண்டும். அங்குள்ள மக்களை சந்தித்து பிரதமரின் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், 6,000 ரூபாய் விவசாய நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் வந்துள்ளனவா என, கேட்பதுடன், அவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் வசிக்கும், 15,000 பெண்களுக்கு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் இயக்க இலவச பயிற்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவை, மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.