பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக உத்தராகண்ட் பேரவை கூட்டம் பிப்.5-ம்தேதி ஒரு நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனாபிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு 2022 மே மாதத்தில் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம்விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அசாம், குஜராத்… இந்த நிலையில், பிப்ரவரி5-ல் உத்தராகண்ட் சட்டப்பேரவைகூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்ட மசோதாவை உத்தராகண்ட் மாநிலம் நிறைவேற்றியதும், பாஜக ஆளும்அசாம் மற்றும் குஜராத் ஆகியமாநிலங்களிலும் இதே சட்டமசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திட்டமிட்டபடி எல்லாம் தடையின்றி நடக்கும்பட்சத்தில், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே மூன்று மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு நாள் கூட்டமாக நடைபெறவுள்ள உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அவை உடனடியாக ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பாஜக வழங்கிய முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் பொது சிவில் சட்டமும் ஒன்றாகும். எனவேதான் உத்தராகண்டில் புதிய அரசு பொறுப்பேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு அதற்கான குழு உடனடியாக அமைக்கப்பட்டது.