மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: நவீன இந்தியாவின் சிற்பிகளில் நேதாஜியும் ஒருவர். எனவே, அவரின் வாழ்க்கை மற்றும் திறன்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகள், என்ன கனவுகளுடன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார்கள் என்பது உண்மையில் நமக்கு தெரியுமா?
சுதந்திரத்திற்கு பிறகு, நாம் சுயநலத்துடன் உறங்கிவிட்டோம். எனது குடும்பம் மற்றும் நான் ஆகியவற்றை தாண்டி நாம் எதையும் பார்ப்பது கிடையாது. ஆணவம், சுயநலம் ஆகியவை தொடர்கின்றன. எனவே நேதாஜி நமக்கு செய்ததை, பெருமையுடன் பார்க்க வேண்டும்.
நேதாஜியின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. நம் தேசத்தில் பன்முகத்தன்மை இருந்த போதிலும் அவர் அனைத்து வேறுபாடுகளுக்கும் மேலாக நாட்டை முதன்மைப்படுத்தினார். நாட்டிற்காக ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தினார். இது, நாட்டின் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. நேதாஜியின் கொள்கைக்கும், நமது கொள்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.