உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று திறக்கப்படவுள்ள ராமர் கோயிலை விண்ணில் இருந்து இந்திய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதுவே ராமர் கோயிலின் முதல் விண்வெளி பார்வை என கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
விண்ணில் இருந்து செயற்கைக்கோள் மூலம் ராமர் கோயில்புகைப்படங்களை ஹைதராபாத்திலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்ஸிங் சென்டர் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இந்தப் படம் விண்ணிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் பகிர்ந்துள்ள இந்தப் படத்தில் சரயு நதி, அயோத்தி ராமர் கோயில் வளாகம், ரயில் நிலையம், தசரத் மஹால் போன்றவை பிரதானமாக தெரிகின்றன.
அயோத்தியில் ‘கிழக்கு – மேற்கு’ திசையாக அமைந்துள்ள ராமர் கோயில் வளாகம் 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக உள்ளது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டுள்ளது. மொத்தம் மூன்று தளங்கள். 392 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் உள்ளன. மொத்தம் 2.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கோயில் வளாகம் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தை பெரிதுபடுத்திப் பார்க்கும்போது கோயில் வளாகம் தெளிவாக வந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோயில் கட்டுமானத்துக்காக இஸ்ரோவின் பல்வேறு தொழில்நுட்பங்களை கோயில் நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
கோயில் கட்டுமானத்துக்கும், கோயிலின் கருவறை எங்கே அமையவேண்டும் என்பதற்கான வழிகாட்டுகளை இஸ்ரோ தனது தொழில்நுட்பம் மூலம் செய்துகொடுத்தது என்று விசுவ இந்து பரிஷத் (விஎச்பி) சர்வதேச தலைவர் அலோக் சர்மா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.