முதல் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டர் வெளிவரும்: அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை

அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி, குஜராத்தில் சனாந்த் நகரில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. இந்தியாவில் அமையும் முதல் செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலை இதுவாகும். இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது: மைக்ரான் அணியின் செயல்பாடு பெரும் நம்பிக்கை தருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமி கண்டக்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். செமிகண்டக்டர் தயாரிப்புக்கான மையமாக இந்தியா உருவாக உள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகிலேயே மிகப் பெரியபசுமை எரிஆற்றல் கட்டமைப்பு குஜராத்தில் அமைய உள்ளது. இரண்டாவது, இந்தியாவில் திறன் மிகுந்த மனித வளம் அதிகம் உள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
தற்போது உலக நாடுகள் மின்னணு வாகனங்களை நோக்கிநகர்ந்து வருகிற நிலையில்,செமி கண்டக்டருக்கான தேவைஅதிகரித்துள்ளது. இந்தியாவும் செமி கண்டக்டர் தயாரிக்க திட்டமிட்டது. அதன்படி குஜராத்தில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க கடந்த ஆண்டு மைக்ரான் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி, குஜராத் சனாந்த் நகரில் செமிகண்டக்டர் ஆலை 2.75 பில்லியன் டாலரில் (ரூ.22,500 கோடி) அமைக்கப்படுகிறது.