தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருச்சியில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “திருச்சி மாவட்டத்தின் எம்எஸ்எம்இ நிறுவனங்கள்தான் ‘பெல்’ பொதுத்துறை நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை வழங்கிக் கொண்டு வந்தார்கள். தற்போது பெல் நிறுவனத்திடம் இருந்து இவர்களுக்கு கேட்பாணை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் இந்தப் பகுதியில் செயல்பட்டுவரும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்து உள்ளன.
எனவே, பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் என பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாத பிஜிஆர் நிறுவனத்துக்கே மீண்டும் ஒப்பந்தம் வழங்க உத்தரவிட்டார். இந்த ஒப்பந்தத்தில் பெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றபோதிலும் தமிழக அரசால் பரிசீலிக்கப்படவில்லை.
இதையடுத்து, பெல் தொழிற்சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரின. ரூ.4442 கோடி ஒப்பந்தத்தை பிஜிஆர் போன்ற நலிவடைந்த நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு, பெல் நிறுவனத்திடம் இருந்து கேட்பாணை குறைந்துவிட்டதாக முதல்வர் முதலை கண்ணீர் வடிக்கிறார். இந்த நிலை உருவாக தங்களது செயல்பாடுகளே காரணம் என்பதை திமுக தற்போது வரை உணரவில்லை.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.