சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின மூத்த தலைவருமான விஷ்ணு தியோ சாய் (59) தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஷ்ணு தியோ சாய் 4 முறை மக்களவை எம்.பி.யாகவும்,2 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர்.
சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா கூறும்போது, “பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சிக்கு வந்தால் விஷ்ணு தியோவை பெரிய மனிதராக்குவேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதை தற்போது பாஜக நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் விஷ்ணு தியோ சாய் கூறியதாவது: சத்தீஸ்கர் மாநில முதல்வர் என்ற முறையில், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதங்களை (தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகள்) நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் பயனாளிகளுக்கு சொந்த வீடுகளை கட்டித் தருவதே எனது முதல் வேலையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விஷ்ணு தியோ சாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமன் சிங் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘குங்குரி எம்எல்ஏவும், பழங்குடியின தலைவருமான விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையில் மோடியின் வாக்குறுதிகளை முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதன் மூலம் மாநிலத்தில் முற்போக்கான மாற்றங்களை கொண்டு வர முடியும். இதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இரட்டை இன்ஜின் அரசு புதிய சாதனைகளை படைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, முதல்வர் பதவியில் இருந்து விலகும் பூபேஷ் பாகெலும் புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘சத்தீஸ்கரில் நீதியை நிலைநாட்டுவதுடன், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்’’ என்று தெரிவித்துள்ளார்.