குஜராத் மாநிலம் ஜுனாகரில் கண்காணிப்பு பணிக்கு புதுமையான வகையில் போலீஸார் பாராமோட்டார் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தின் ஜுனாகர்மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கிர்நார் மலை உள்ளது. இந்த மலையை பக்தர்கள் வலம் வரும் வருடாந்திர யாத்திரைலில்லி பரிக்கிரமா என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. கிர்நாரில் உள்ள பவ்நாத் கோயிலில் இருந்து யாத்திரையை தொடங்கும் பக்தர்கள், மலை மற்றும் வனப் பகுதி வழியாக 36 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கின்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லில்லி பரிக்கிரமா யாத்திரையை குஜராத் போலீஸார் பாராமோட்டார் மூலம் கண்காணிக்கும் வீடியோ, எக்ஸ்,ரெட்டிட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குஜராத் காவல் துறை இந்த வீடியோவை தங்களின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து குஜராத் போலீஸார்தங்கள் பதிவில், ஜுனாகரில் லில்லி பரிக்கிரமாவை கண்காணிக்க பாராமோட்டாரை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். போலீஸ் காவலர் ஒருவர் தனது பாராமோட்டாரில் இருந்து கிர்நார் நகரை கண்காணிப்பதை இதில் பார்க்க முடிகிறது.
சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் பலர் இந்த யோசனைக்கு வியப்பும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். சிலர், ட்ரோன் பயன்படுத்துவது இதை விட சிறந்ததாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு இயந்திரத்தை பாராகிளைடருடன் இணைத்து பயன்படுத்துவது பாராமோட்டார் என்று அழைக்கப்படுகிறது. புறப்படுவதற்கு தேவையான உந்துதலை இந்த இயந்திரம் வழங்குகிறது. உதவியாளர் தேவையின்றி விமானியே இதனை இயக்க முடியும். புறப்படுவதும், தரையிறங்குவதும் பொதுவாக திறந்தவெளியில் மேற்கொள்ளப்படுகிறது. பாராமோட்டார் விமானிகள் முறையான சான்றிதழ் பெறவேண்டிய தேவைகள் இல்லை. என்றாலும் குஜராத் போலீஸார் இதனை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.