குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) இறுதி வரைவு வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாகுர் நகரில், நேற்று முன்தினம் மதுவா சமுதாய மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய உள் துறை இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்ட மசோதா (சிஏஏ) 2019-ம் ஆண்டுநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்ட மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை எதிர்த்து வாதாடி வெற்றி பெறுவோம். சிஏஏ சட்ட விதிமுறைகளை உருவாக்கும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிந்துவிடும். இந்த சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். மதுவா சமுதாயத்தினருக்கு இந்திய குடியுரிமை பெற முழு உரிமை உள்ளது. இந்தஉரிமையை யாராலும் பறிக்க முடியாது. முறையான ஆவணம் இல்லாவிட்டாலும் உங்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வகை செய்கிறது.
வங்கதேச பிரிவினைக்குப் பிறகு அந்நாட்டில் வசித்த மதுவா சமுதாயத்தினர் மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக மேற்கு வங்கத்தில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.