வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த, ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த செப்டம்பரில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான துாதரக உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மா, அங்குள்ள தனியார், ‘டிவி’ சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: நிஜ்ஜார் கொலை வழக்கில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல், இந்தியாவை குற்றவாளியாக கனடா அறிவித்துஉள்ளதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி, இந்திய அரசுக்கு கனடா கூறியுள்ளது.
அப்படியென்றால், இந்த விவகாரத்தில் உங்களுக்கு தொடர்பு உள்ளது. அதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கூறுவதாகத்தானே அர்த்தம்?
ஏற்கனவே பலமுறை கூறியுள்ளதுபோல், நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசுக்கோ, இந்திய ஏஜன்ட்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் அதை பரிசீலிக்கிறோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், இதற்கு எந்த பதிலும் வரவில்லை. கனடாவில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். உங்களுடைய மண்ணில் ஏதாவது பிரச்னை இருந்தால், அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது.
அதே நேரத்தில், எல்லையைக் கடந்து, அங்குள்ள பயங்கரவாதிகள் இந்தியாவில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதனால் தான், அவர்களை ஒடுக்கும்படி கனடாவை வலியுறுத்துகிறோம். தடை செய்யப்பட்ட இயக்கம் மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான விபரங்களை கனடாவுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளோம். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தங்களுடைய நாட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதற்கு, எங்களை கேள்வி எழுப்பினால், அதை எப்படி ஏற்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.