இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக தற்போது உருவாகி இருப்பவர் முகமது ஷமி.அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் சிறப்பாக பந்துவீசி 24 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பை போட்டியில் அதிக அளவு விக்கெட்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்தார்.
இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கிய, அடையாளம் தெரியாத ஒரு நபரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் முகமது ஷமி.அண்மையில் உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள மலைப் பகுதியில், முகமது ஷமி தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முகமது ஷமியின் வாகனத்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதைப் பார்த்த ஷமி மற்றும் அங்கிருந்த சிலர் ஓடி சென்று விபத்துக்குள்ளான அந்த காரில் இருந்த நபரை வெளியே இழுத்து கொண்டுவந்து காப்பாற்றினர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷமி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில் முகமது ஷமி கூறியிருப்பதாவது: விபத்தில் சிக்கிய அந்த நபர் அதிர்ஷ்டக்காரர். கடவுள் அந்த நபருக்கு 2-வது முறையாக வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். நைனிடால் அருகே, மலை பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. நாங்கள்அவரை பாதுகாப்பாக மீட்டுவெளியே கொண்டு வந்தோம். அவர் தற்போது நலமாக இருக்கிறார். அவரை காப்பாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் அதில் பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து சாலை விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்றிய முகமது ஷமிக்கு சமூக வலைதளத்தில் அதிகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் பகிர்ந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.