எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ தகுதித் தேர்வு தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவ படிப்புக்கு தேவையான இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கூடுதல் பாடமாக படித்தவர்களும் இனி இளநிலை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவ்வாறு கூடுதல் பாடத்தில் தேர்ச்சி பெறுவோருக்கு என்எம்சி சார்பில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் மூலம் பன்னிரண்டாம் (10 2) வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும்கணக்கு பாடங்களைப் படித்தவர்களும் இனி நீட் தேர்வு எழுத முடியும். ஆனால், அவர்கள் கூடுதலாக உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மத்திய அல்லது மாநில தேர்வு வாரியத்தின் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இப்போது உள்ள என்எம்சி விதிமுறைகளின்படி, இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பம் ஆகிய பாடங்களை 11 மற்றும் 12-ம்வகுப்பில் படித்தவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுத அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவ படிப்புக்கு தேவையான உயிரியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு தேர்வை மட்டும் தனியாக எழுதி தேர்ச்சி பெற்றால் கூட நீட் தேர்வு எழுத முடியாது.