சிறை கொடுமைகள் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் தருவேன்: அமர் பிரசாத்

”சிறையில் நடக்கும் கொடுமைகள், முறைகேடுகள் குறித்து, மத்திய அரசிடம் அறிக்கை தருவேன்,” என, பா.ஜ., கொடி கம்பம் அமைக்கும் தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த அமர் பிரசாத் தெரிவித்தார்.

சென்னை கானாத்துாரில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீட்டின்முன், கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக கட்சியினருக்கும், போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத், நிர்வாகிகளான வினோத்குமார், செந்தில்குமார், கன்னியப்பன், பாலகுமார், சுரேந்திர குமார் ஆகியோர், கைது செய்யப்பட்டனர்; பின், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று ஆலந்துார் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் உள்ளிட்ட ஆறு பேரும் ஆஜராகி, இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என, உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டனர். பின், அமர் பிரசாத் கூறியதாவது: சிறைச்சாலையின் உள்ளே மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடக்கிறது. இதுகுறித்து, மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வேன். மத்திய மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்; விதிமீறல்கள், கட்டுக்குள் வரும் வரை விட மாட்டேன்.

பா.ஜ. வளர்ச்சியை தடுக்க நினைத்தால், அதைவிட கோமாளித்தனம் வேறு ஏதும் இல்லை. என்னை சிறையில் அடைத்தற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டோம். வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.