தென்னை நார் தொழிலை ஊக்குவிக்க ஆறு இடங்களில் கயிறு குழும வசதி மையம்

தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு உதவ, திருப்பூர், கரூர் உட்பட ஆறு இடங்களில், கயிறு குழும பொது வசதி மையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது. தேங்காய் மட்டையில் இருந்து தென்னை நார் பிரித்து எடுக்கப்படுகிறது. அதிலிருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர, தென்னை நார் பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் தென்னை நார் துகளை பயன்படுத்தி, வீடு உள்ளிட்ட கட்டடங்களில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

அதன் வாயிலாகவே அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் காய்கறி, பழங்கள் போன்றவை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதனால், பல நாடுகளில் தென்னை நார் துகளுக்கு அதிக தேவை உள்ளது. தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம், கோவை மாவட்டத்தில் உள்ளது.

இந்நிறுவனம், தமிழகத்தில் தென்னை நார் தொழிலை மேம்படுத்தவும், தென்னை நார் மற்றும் துகள் கட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. தற்போது, தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதவவும், ஊக்குவிக்கவும், திருப்பூர், கோவை, தஞ்சை, கரூர் ஆகிய இடங்களில் ஐந்து கயிறு தொழில் குழும பொது வசதி மையம் அமைக்கும் பணிகளை அரசு துவக்கியுள்ளது.

இதை தொடர்ந்து, விருதுநகரிலும் கயிறு குழுமம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவில் தென்னை நார், தென்னை துகள் கட்டி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கயிறு உற்பத்தி தொழிலில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் வருமானத்தை பெருக்கிட, அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு சிறிய நிறுவனத்தால், அதிக முதலீட்டில் பெரிய இயந்திர தளவாடங்களை நிறுவுவது என்பது சிரமம். எனவே, தமிழக அரசின் சார்பில், தற்போது ஐந்து இடங்களில் கயிறு தொழில் குழும பொது வசதி மையம் அமைக்கப்பட உள்ளது. அங்கு, தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள, 20 – 25 நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில், பொது இயந்திர தளவாடங்கள் போன்றவை நிறுவப்படும்.

அதை, ஒவ்வொரு நிறுவனமும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான மொத்த செலவில், 75 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும்; மீதி, 25 சதவீதம் நிறுவனங்களின் பங்கு. அவை, தங்களுக்குள் ஒரு பொது நிறுவனத்தை ஏற்படுத்தி, கயிறு குழுமத்தை நிர்வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.