தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் எவ்வளவு திரட்டி உள்ளன என்பது தொடர்பான விவரங்களை சீல் இடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதி அமர்வு நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் திரட்டிய நிதி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், அந்த உத்தரவை சுட்டிக்காட்டிய ஐந்து நீதிபதி அமர்வு, முந்தைய உத்தரவானது அந்த ஆண்டுக்கு மட்டுமானது அல்ல என்றும் தொடர்ந்து அந்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரையில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் இந்த விவரங்கள் அனைத்தையும் சீல் இடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு வரையிலான விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், “இந்த உத்தரவு 2019-ம் ஆண்டுக்கானது மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும், இந்த விவரங்களை சேகரிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.